ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு போட்டியாக பெர்த்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ட்ரண்ட் போல்ட் விலகிய காரணத்தினால், அவருக்கு பதிலாக லோக்கி ஃபர்குசன் அணியில் இடம்பெற்றார். தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த ஃபர்குசன், 11 ஓவர்களை மட்டும் வீசியிருந்த நிலையில் வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.
அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு இரண்டாம் நிலை காயம் இருப்பது உறுதியானது. இதனால் அவர் தனது முதல் சர்வதேச போட்டியோடு, டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.