வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில், தனது கிரிக்கெட் பயணத்தை 1999இல் தொடங்கினார். அவரது முதல் போட்டியே இந்திய அணிக்கு எதிராகத் தான் அமைந்திருந்தது. பின்னர், தனது அதிரடியான ஆட்டத்தால் கிரிக்கெட்டின் ‘யுனிவர்சல் பாஸ்’ என்ற செல்லப்பெயரைப் பெற்றார். இந்தியாவுக்கு எதிராக தனது கணக்கை தொடங்கியது போலவே, இந்தியாவுடன் தனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.
இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால், இப்போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்று தொடரை சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இப்போட்டி கெயிலின் கடைசி போட்டி என்பதால், அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி, கிறிஸ் கெயில், எவின் லீவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவ்விரு வீரர்களும் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். குறிப்பாக, சிக்சருக்கு பெயர்போன கிறிஸ் கெயில் தனது பேட்டினை மைதானத்தின் நான்கு பக்கங்களும் பவுண்ட்ரிகளும், சிக்சர்களுமாக வானவேடிக்கை நிகழ்த்தி பறக்கவிட்டார்.
இதில், அதிரடியாக ஆடிய இவர் ஒருநாள் போட்டியில் தனது 54ஆவது அரைசதத்தை 10ஆவது ஓவரில் எட்டினார். தொடர்ந்து அதிரடியாக ஆட முயற்சித்த இவர், கலீல் அஹமது வீசிய 12ஆவது ஓவரில் விராட் கோலியிடம் கேட்ச் தந்து 72 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 41 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 8 பவுண்டரிகள், 5 சிக்சர்களை பறக்கவிட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்களை எடுத்துள்ளது. ஹெட்மயர் 9 ரன்களுடனும், ஹோப் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஒருநாள் போட்டியில் கெயில் படைத்த முக்கியமான சாதனைகள்:
- அதிக சிக்சர்கள் அடித்த இரண்டாவது வீரர் - 331
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் - 10, 552
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் - 301