தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 26, 2020, 5:16 PM IST

ETV Bharat / sports

புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ்: களமிறங்கவுள்ள இந்தியா, பாகிஸ்தான் ஜாம்பவான்கள்!

மெல்போர்ன்: புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டியில் இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங், பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆகியோர் களமிறங்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

indias-yuvraj-singh-added-his-names-to-the-list-of-stars-featuring-in-the-bushfire-cricket-bash
indias-yuvraj-singh-added-his-names-to-the-list-of-stars-featuring-in-the-bushfire-cricket-bash

ஆஸ்திரேலியக் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு அறக்கட்டளைகள் சார்பில் நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் பிப்ரவரி 8ஆம் தேதி புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ் என்ற பெயரில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணி, ஷேன் வார்னே தலைமையிலான அணியை எதிர்கொள்கிறது.

இந்த புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டியில் ஏராளமான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த இரு அணிகளுக்கும் சச்சின், வால்ஷ் ஆகியோர் பயிற்சியளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தான் வீரர்களும் புஷ் ஃபயர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான லூக் ஹாட்ஜ், மைக் ஹசி, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஹெய்டன் என பல்வேறு ஜாம்பவான் வீரர்களும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தப் போட்டி பிக் பாஷ் தொடரின் இறுதிப் போட்டியன்று நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்கான மைதானத் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியக் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியளிக்க நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு நாட்டு வீரர்களும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியின்போது வசூலிக்கப்படும் நிதியை ஆஸ்திரேலியாவின் ரெட் கிராஸ் பேரிடர் மீட்பு அமைப்பிற்கு போட்டியை நடத்தும் அமைப்பினர் வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாங்க அதை சொல்லவே இல்லங்க - அந்தர் பல்டி அடித்த பாக். கிரிக்கெட் வாரியம்

ABOUT THE AUTHOR

...view details