இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கின்றன. இதன் முதல் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் 27ஆம் தேதி சென்னை வரவுள்ளனர்.
இந்த டெஸ்டில் பங்கேற்கும் அணி வீரர்கள் வெவ்வேறு நகரத்தில் இருந்து வருகை தரவுள்ளனர். இதன் காரணமாக பயோ பபுள் பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் 27ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். வீரர்கள் அனைவரும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பின் இங்கிலாந்து அணி வீரர்களும் ஜனவரி 27ஆம் தேதி சென்னை வருகை தரவுள்ளனர். ஆனால் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக இந்தியா வரவுள்ள ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் ஆகியோர் முன்பாகவே இந்தியா வந்தடைவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.