நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்றுள்ள மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களாக கப்தில் - முன்ரோ களமிறங்கி அதிரடியாக ஆடினர். இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 47 ரன்கள் சேர்த்த நிலையில், கப்தில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரர் காலின் முன்ரோ 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 7 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து கேப்டன் வில்லியம்சனுடன் நைட் வாட்ச்மேனான சாண்ட்னர் களமிறங்கினார். இதையடுத்து வில்லியம்சன் அதிரடியாக ஆட, 10 ஓவர்களில் நியூசி. 79 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சாஹல் வீசிய பந்தில் சாண்ட்னர் ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பானது.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் வில்லியம்சன் அதிரடியால் 15 ஓவர்களில் நியூசி. 128 ரன்கள் எடுத்தது. இதனிடையே கேப்டன் வில்லியம்சன் அரைசதம் கடந்தார்.
பின்னர் 16ஆவது ஓவரில் கிராண்ட்ஹோம் 5 ரன்களில் ஆட்டமிழக்க, 17ஆவது ஓவரை வீசிய பும்ராவின் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்து வில்லியம்சன் அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 29 ரன்கள் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. 18ஆவது ஓவரில் சாஹல் 9 ரன்கள் விட்டுக்கொடுக்க, 19ஆவது ஓவரை வீசுவதற்கு பும்ரா அழைக்கப்பட்டார். இதில் இரண்டு பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் இறுதி ஓவரில் நியூசிலாந்து வெற்றிபெறுவதற்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.