தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாஸ் காட்டிய ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர்... நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா - KL Rahul

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

India won by 6 wickets against NZ
India won by 6 wickets against NZ

By

Published : Jan 24, 2020, 4:10 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 7 ரன்களில் வெளியேற, பின்னர் கேப்டன் கோலி - ராகுல் இணை ஜோடி சேர்ந்தது. இந்த இணை தொடக்கம் முதலே அதிரடியாக ஆட, இந்திய அணி 5 ஓவர்களில் 57 ரன்களை எடுத்தது. இதன்பின் கோலியை ரன் அவுட் செய்வதற்கு நியூசிலாந்து அணிக்கு கிடைத்த எளிதான வாய்ப்பை அந்த அணி அவரசத்தால் வீணடித்தது.

ராகுல்

பின்னர் இந்த இணை ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியோடு சிங்கிள்களையும் வேகமாக எடுக்க இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த இணையின் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் 29 பந்துகளில் கடந்தது. இந்த இணையின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி 100 ரன்களை 8.4 ஓவர்களில் எட்டியது. இதற்கிடையே கேஎல் ராகுல் 23 பந்துகளில் சிக்சர் அடித்து அரைசதத்தைக் கடந்தார்.

பின்னர் அதிரடியாக ஆடிய ராகுல் 27 பந்துகளில் 57 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, இந்திய அணி 10 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விராட் கோலியும் 45 ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோலி விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூ, வீரர்கள்

தொடர்ந்து இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் - சிவம் தூபே களத்தில் இருந்தனர். இந்த ஜோடி அதிரடியாக ஆட, இந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் 142 ரன்கள் எடுத்தது. இளம் வீரர் சிவம் தூபே 13 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த ஓவர்களில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 60 ரன்கள் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து விக்கெட் கொடுக்கக்கூடாது என மனிஷ் பாண்டே - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி ஆட, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். 16ஆவது ஓவரில் 14 ரன்களும், 17 ஆவது ஓவர்களில் 10 ரன்களும் எடுக்க, இந்திய அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்டது.

ஸ்ரேயாஸ் ஐயர்

18ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளோடு சேர்த்து 11 ரன்கள் எடுக்க, ஆட்டம் இந்திய அணியின் கைகளுக்குள் வந்தது. அதையடுத்து 19ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் சிக்சர், பவுண்டரி அடித்து ஸ்ரேயாஸ் அரைசதத்தைக் கடந்தார். பின் அதே ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இறுதியாக இந்திய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 29 பந்துகளில் 58 ரன்களும், மனிஷ் பாண்டே 14 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க: கடைசி பந்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா!

ABOUT THE AUTHOR

...view details