தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மகளிர் டி20 உலகக்கோப்பை - நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா - அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி

மெல்போர்ன்: இந்திய பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா அணி மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

Womens T20 worlld cup
India women beat New Zealand by 4 runs

By

Published : Feb 27, 2020, 1:51 PM IST

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பையின் ஒன்பதாவது ஆட்டத்தில், குரூப் ஏ பிரிவிலுள்ள இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இன்று மோதின.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீராங்கனை ஷெஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 46 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடக்கம்.

விக்கெட் கீப்பர் பாட்யா இவருக்கு அடுத்து அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். மாற்று வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 133 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில் மையர், கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் நல்ல ஃபார்மில் இருந்த தொடக்க வீராங்கனை பிரைஸ்ட் 12 ரன்களில் பாண்டே பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதைத்தொடர்ந்து பேட்ஸ் 6 ரன்களில், தீப்தி ஷர்மா பந்தில் கிளின் போல்டு ஆக, பவர் ப்ளே முடிவில் 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

மறுமுனையில் கேப்டன் டிவைன் பொறுமையாக விளையாடி வந்த நிலையில், 14 ரன்கள் எடுத்திருந்தபோது பூனம் யாதவ் சுழலில் ராதா யாதவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

கடந்த ஏழு டி20 இன்னிங்ஸில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து சிறப்பாக விளையாடி வந்த இவரது ரன் வேட்டையை, தனது சூழலின் மூலம் கட்டுப்படுத்தினார் பூனம் யாதவ்.

இதன் பின்னர் களமிறங்கிய கிரீன் 24, மார்டின் 25 ரன்கள் எடுத்து வெற்றிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து தந்து அவுட்டாகினர்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையாக 16 ரன்கள் இருந்த நிலையில், களத்தில் இருந்த கெர், ஜென்சென் ஆகியோர் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து வெற்றிக்கு அருகே அணியை கொண்டு சென்றனர்.

ஒரு பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் செய்த கெர், பாண்டேவின் துல்லியமான யாக்கர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் காலில் வாங்கி தவறவிட்டார்.

இதற்கு ஒரு ரன் ஓட முயற்சித்தபோது மறுமுனையில் இருந்த ஜென்சென் ரன் அவுட் ஆனார். இதையடுத்து 129 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்திய தரப்பில் பந்து வீசிய தீப்தி ஷர்மா, பாண்டே, கெய்க்வாட், பூனம் யாதவ், ராதா யாதவ் என அனைத்து வீராங்கனைகளும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முதல் அணியாக நுழைந்துள்ளது இந்திய அணி.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக பேட்டிங் செய்த செஃபாலி வர்மா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

மொத்தம் நான்கு லீக் போட்டிகள் ஒவ்வொரு அணியும் விளையாட வேண்டிய நிலையில், தற்போது 3 போட்டிகள் விளையாடியிருக்கும் இந்திய அணி, அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு எதிராக தனது நான்காவது லீக் போட்டியில் மெல்போர்னில் வரும் 29ஆம் தேதி விளையாடவுள்ளது இந்திய அணி.

ABOUT THE AUTHOR

...view details