சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்.13) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.
அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் இளம் வீரர் சுப்மன் கில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித் சர்மாவுடன் இணைந்த புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.
மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் அரங்கில் 12ஆவது அரைசதத்தைக் கடந்தார். இந்நிலையில், 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புஜாரா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி, ரன் ஏதுமின்றி மோயீன் அலி வீசிய பந்தில் கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.