ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் அடங்கிய இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலியாவும், மற்றொன்றில் இந்தியாவும் வென்றுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று(ஜனவரி 7) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
மேலும் இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில், காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமல் விலகிய டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி ஆகியோர் அணிக்குத் திரும்பினர்.
அதேபோல் இந்திய அணியிலும் மயாங்க் அகர்வாலிற்கு பதிலாக ரோஹித் சர்மாவும், காயம் காரணமாக விலகிய உமேஷ் யாதவிற்கு பதிலாக அறிமுக வீரர் நவ்தீப் சைனியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய டேவிட் வார்னர், முகமது சிராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் வில் புகோவ்ஸ்கியுடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுசாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போட்டியின் ஏழாவது ஓவரின் போது மழைக்குறுக்கிட்டதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் வில் புகோவ்ஸ்கி 14 ரன்களுடனும், மார்னஸ் லபுசாக்னே 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார்.
இந்திய அணி: அஜிங்கியா ரஹானே (கே), ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி, மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், கேமரூன் கிரீன், டிம் பெய்ன் (கே), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
இதையும் படிங்க:‘ஸ்டீவ் ஒரு கூண்டுக்குள் இருக்கும் சிங்கம்’ - டாம் மூடி