இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது, பகலிரவு ஆட்டமாக நேற்று(டிச.17) அடிலெய்டில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமலும், மயாங்க் அகர்வால் 17 ரன்களிலும், புஜாரா 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கோலி - ரஹானே பார்ட்னர்ஷிப்:
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - ரஹானே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரன் கணக்கை உயர்த்தினர். இதில் விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தினார்.
அதைத்தொடர்ந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கோலி 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரஹானேவும், 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவு:
அவர்களைத் தொடந்து வந்த ஹனுமா விஹாரி 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய சஹா - அஸ்வின் இணை பொறுமையாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் சஹா 9 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள் தொடக்கமே சறுக்கல்:
இதையடுத்து இன்று(டிச.18) இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் இன்றைய நாளின் இரண்டாவது ஓவரை வீசிய ஸ்டார்க், சஹாவின் விக்கெட்டை கைப்பற்றினார்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டார்க் அதன்பின் வந்த ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டத்தின் 3.1 ஓவர்களுக்குள்ளாகவே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 244 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் முகமது அமீர்!