இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மலிங்கா தலைமையிலான இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், கவுகாத்தியில் நடைபெறயிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றிருந்தது.
இந்நிலையில், இத்தொடரின் கடைசி போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. இந்தியா அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்லுமா அல்லது இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எழுந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. ரிஷப் பந்த், சிவம் தூபே ஆகியோருக்கு பதிலாக சஞ்சு சாம்சன், சாஹல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களான கே.எல். ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 97 ரன்களை சேர்த்த நிலையில், ஷிகர் தவான் 52 பந்துகளில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் ஆறு ரன்களில் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில், சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 54 ரன்களிலும் அவுட்டாக அவரையடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் நான்கு ரன்களில் நடையைக் கட்டினார். இதனால், இந்திய அணி 12.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை எடுத்திருந்து.
இறுதியில், மணிஷ் பாண்டே, ஷர்துல் தாகூர் ஆகியோரது அதிரடியில் இந்திய அணி 20 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது. மனிஷ் பாண்டே 18 பந்துகளில் நான்கு பவுண்டரி உட்பட 31 ரன்களிலும், ஷர்துல் தாகூர் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர் உட்பட 22 ரன்களிலும் ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தனர்.