விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் டி20 தொடரை கைப்பற்றும். உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி விளையாடும் முதல் தொடர் என்பதால், இந்திய அணி மீது எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியின் மூலம் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான நவ்தீப் சைனி சிறப்பாக பந்துவீசினார். ஃப்ளாட் பிட்ச் அதிக ரன்மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று விக்கெட் மழைதான் பொழிந்தது.
நவ்தீப் சைனி, கலீல் அகமது, குருணால் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி 95 ரன்களை மட்டுமே எடுத்தது. டி20 கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் என்று தனிப்பெயர் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த ஆட்டத்திறனைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால், இன்றையப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் இந்திய தேர்ச்சி பெற்றாலும், பேட்டிங்கில் மிகவும் மோசமாகத்தான் செயல்படுகிறது.