இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 273 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணியின் விராட் கோலி - ரஹானே இணை சிறப்பாக ஆடியது. இவர்கள் இருவரும் இணைந்து தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். வேகமாக ரன்குவித்த இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் தனது 26ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.
அதையடுத்து ரஹானே 59 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடி வீரர் ஜடேஜா களமிறங்கினார். பின் விராட் கோலி - ஜடேஜா இணை இந்திய ரன்குவிப்பை டாப் கியருக்கு மாற்றியது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து அதிரடியாக ஆடி 150 ரன்களைக் கடக்க, மறுபக்கம் ஜடேஜா 79 பந்துகளில் 50 ரன்களை கடந்து அசத்தினார். அதையடுத்து இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 போட்டிகளைப் போல் ஆடத் தொடங்கினர். ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரி, சிக்ஸர் என அடிக்க, இந்திய கேப்டன் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 7ஆவது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்திய இந்த இணை இந்திய அணியின் ஸ்கோரை 600 ரன்களுக்கு எடுத்துச் சென்றது. இந்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக 250 ரன்களைக் கடந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ஜடேஜா 91 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 601 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. கடைசி வரை சிறப்பாக ஆடிய இந்திய கேப்டன் விராட் கோலி 254 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையும் படிக்கலாமே: #INDvSA: இன்னும் யாராது இருக்கீங்களா... பிராட்மேன், சச்சின், சேவாக் சாதனையை உடைத்த விராட் கோலி!