இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (மார்ச் 16) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்து விளையாடியது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, இஷான் கிஷான், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் என அதிரடி வீரர்கள் அனைவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த கேப்டன் விராட் கோலி, சர்வதேச டி20 அரங்கில் தனது 27ஆவது அரைசதத்தைப் பதிவு செய்ததுடன் அணியின் ஸ்கோரையும் மின்னல் வேகத்தில் உயர்த்தினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பில் 156 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் விராட் கோலி நான்கு சிக்சர், எட்டு பவுண்டரிகளை விளாசி 77 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ஜேசன் ராய் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த டேவிட் மாலனும் 18 ரன்களில் நடையைக் கட்டினார்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ஜோஷ் பட்லர், இந்திய அணியின் பந்துவீச்சை சிக்சர், பவுண்டரி என விளாசி அரைசதம் கடந்தார். அத்தோடு மட்டும் நிற்காமல் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதனால், இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து, இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த ஜோஸ் பட்லர், 5 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 83 ரன்களை குவித்தார்.
இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்: நூறாவது போட்டியில் களமிறங்கிய முதல் இங்கிலாந்து வீரர்!