பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜன.15) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
அதன்படி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை எடுத்தது. அந்த அணி வீரர்களான கேப்டன் டிம் பெய்ன் 38 ரன்களுடனும், காமரூன் கிரீன் 28 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிம் பெய்ன் அரைசதம் கடந்தார். அதன்பின் 50 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த காமரூன் கிரீனும் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டர்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மார்னஸ் லபுசாக்னே 108 ரன்களையும், கேப்டன் டிம் பெய்ன் 50 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையும் படிங்க:ஐஎஸ்எல் : நெவிலின் இறுதி நிமிட கோலால் தோல்வியைத் தவிர்த்த ஈஸ்ட் பெங்கால்!