இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து வரும் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இப்போட்டியில் தனது முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை வீழ்த்திய முகமது சிராஜை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய சச்சின், "முகமது சிராஜ் பந்துவீசும் போது, 'பந்து ரிவர்ஸ் ஸிவ்ங் ஆகிறது' என்று வர்ணனையாளர்கள் சொல்வதை நான் கேட்டேன். அவுட்-ஸ்விங் வீசும்போது சிராஜ், பந்தின் பின் பக்கம் பிடித்து, பந்தை விடுவிப்பார். இதனால் பேட்ஸ்மேன் அவரது பந்தை அடிக்க முயற்சிக்கும் போது முதல் ஸ்லிப் அல்லது இரண்டாவது ஸ்லிப்பிடம் கேட்ச் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும் அவர் இன் - ஸ்விங்கை வீச விரும்பும் போது, ஸ்லிப் பீல்டரை ஆஃப் சைடில் வைத்திருப்பார். இதனால் அவர் தனது விக்கெட்டை எவ்வாறு வீழ்த்துவது என்பதை துல்லியமாக கணித்து விளையாடுகிறார். வர்ணனையாளர்களும் இது ஒரு சிறந்த யோசனை என சிராஜின் திறனை பாராட்டியுள்ளனர். இதன் காரணமாகவே சிராஜின் பந்துவீச்சு பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்டார் மொயின் அலி!