ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை (ஜன.15) பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மார்னஸ் லபுசாக்னே 108 ரன்களும், டிம் பெய்ன் 50 ரன்களும் எடுத்தனர். அறிமுக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மாவும் 44 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே - புஜாரா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. புஜாரா 25 ரன்களிலும், ரஹானே 38 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரிஷப் பந்த்தும் 23 ரன்களுடன் நடையை கட்டினார்.
தொடர் விக்கெட் இழப்பு காரணமாக இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்குமா என்ற சந்தேகம் எழத்தொடங்கியது. சந்தேகத்தை போக்கும் வகையில் வாஷிங்டன் சுந்தர் - ஷர்துல் தாக்கூர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷர்துல் தாக்கூர் சிக்சர் அடித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வாஷிங்டன் சுந்தரும், தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார்.