பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (ஜன.16) நடைபெற்றது. 274 ரன்களுடன் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினர்.
இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 369 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் தலா மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா - சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மாவும் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே - புஜாரா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பைத் தவிர்க முயர்சித்தனர். இந்திய அணி 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தின் இடையே மழைக்குறுக்கிட்டதால் தேநீர் இடைவெளி அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தேநீர் இடைவேளையுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 62 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் கேப்டன் ரஹானே 2 ரன்களுடனும், புஜாரா 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் 307 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை (ஜன.17) மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.
இருப்பினும் இன்றைய ஆட்டம் மழை குறுக்கிட்டதன் காரணமாக இந்திய அணி ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். காரணம் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணி 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
அதேசமயம் இப்போட்டிக்கான இந்திய அணியில் புஜாரா, ரஹானே, ரோஹித் ஆகியோர் மட்டுமே ஓரளவு பேட்டிங்கில் சிறந்து விளங்கக்கூடியவர்கள். அதிலும் ரோஹித் சர்மா 44 ரன்களில் விக்கெட்டை இழந்துவிட்டார். அடுத்து வந்த கேப்டன் ரஹானே - புஜாரா இணை தாக்குப்பிடித்தால் மட்டுமே அணியின் ஸ்கோர் உயர வாய்ப்புள்ளது. அவர்களும் ஆட்டமிழந்தால், இந்திய அணி மீண்டுமொரு படுதோல்வியைச் சந்தித்து தொடரை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.
இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியாவின் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு