இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை எடுத்திருந்தது.
தேநீர் இடைவேளைக்கு பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி சிராஜ், ஷர்துல் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது.
இதில் முகமது சிராஜ், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களையும், டேவிட் வார்னர் 48 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் , வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 328 ரன்களை இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.