ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நேற்று முந்தினம் (டிச. 26) தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்திலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, கேப்டன் ரஹானேவின் அசத்தலான சதத்தால், இரண்டாம் நாள் ஆட்டத்தின் போதே முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்களுக்கு இன்னிங்ஸை நிறைவுசெய்தது.
இந்திய அணி தரப்பில் கேப்டன் ரஹானே 112 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 57 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.