பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (ஜன.17) தொடங்கியது. இதில் 307 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா 25 ரன்களிலும், கேப்டன் ரஹானே 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயாங்க் அகர்வாலும் 38 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்குத் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - வாஷிங்டன் சுந்தர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷப் பந்த், ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து, வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்த ஷர்துல் தாக்கூர் தனது முதல் ரன்னை சிக்சர் அடித்து தொடங்கினார். தொடர்ந்து இந்த ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விளாசியது.