இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற டிச.17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சீன் அபேட் காயமடைந்தார். இதன் காரணமாக அபேட் டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, சீன் அபேட்டிற்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஹென்ரிக்ஸ் காயம் காரணமாக இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலிருந்து விலகினார். தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர், உடற்தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்ததை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஹென்ரிக்ஸ் 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறுகையில், “இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் சீன் அபேட், டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.