ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தெருவில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர். அதில், போலியா நோயால் தாக்கப்பட்டு முற்றிலும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன், மற்றொரு சிறுவனுக்கு இணையாக ரன் எடுக்க ஓடியுள்ளார். இதனை அங்குள்ள ஒருவர் காணொலி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.
சமூக வலைதளவாசிகள் செய்த ட்ரெண்ட்டில் அந்தக் காணொலி மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் கவனத்திற்கும் சென்றது. காணொலியைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த அவர், புத்தாண்டு அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அதனுடன், "இந்தப் புத்தாண்டை, சிறுவன் மடராமின் தன்னம்பிக்கை காணொலி மூலம் அனைவரும் தொடங்குங்கள். இந்தக் காணொலி எனது இதயத்தை மிகவும் நெகிழ வைத்தது” என்று பதிவிட்டிருந்தார்.