கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காரணமாக மே 3ஆம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கை நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏற்கெனவே இம்மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சிசன், தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கேவின் தமிழ் புலவருமான ஹர்பஜன் சிங், முன்னாள் கேப்டன் தோனி குறித்த முடிவை எடுக்க, இந்திய தேர்வுக் குழுவினருக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஹர்பஜன் அளித்துள்ள பேட்டியில், “ஐபிஎல் தொடரில் தோனி எப்படி செயல்படுவார் என்பதைப் பொறுத்தே அவரை அணியில் சேர்க்கும் முடிவு எடுக்கப்படும் என தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் நீங்கள் எப்படி தோனியை குறைத்து மதிப்பிடலாம்? அவர் இந்திய அணிக்காக இதுநாள் வரை ஒரு வீரராகவும், கேப்டனாகவும் செய்துள்ளதை மறந்துவீட்டீர்களா இந்திய கிரிக்கெட்டிற்கு அவரின் பங்களிப்பானது இன்றியமையாத ஒன்று என்பதை உணருங்கள்.
தோனி ஒரு மிகப்பெரும் திறன் வாய்ந்த விளையாட்டு வீரர். மேலும் அவர் திறமையானவரா அல்ல திறமையற்றவரா என யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன. என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் அவரைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை டி20 உலகக்கோப்பைத் தொடர் வரை தோனி தனது ஓய்வை அறிவிக்காமலிருந்தால், இந்திய அணி நிச்சயம் அவரை தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல் பலரும் தோனி கடந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து அணியில் இடம்பிடிக்க வில்லை என்றும், அதனால் அவரின் பயணம் முடிந்து விட்டது என்றும் கருத்து கூறுகிறார்கள். அவர்களிடம் என்னுடைய கேள்வி, ஹர்திக் பாண்டியாவும் கடந்த உலகக்கோப்பைத் தொடரிலிருந்து, காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் உள்ளார். அதனால் நீங்கள் அவரை டி20 உலகக்கோப்பைக்கு அனுமதிக்க வேண்டாம் என்று கூறுவீர்களா? மாட்டீர்கள், காரணம் உங்களுக்கு அவரின் தேவை உள்ளது.
நீங்கள் ஏன் அவரிடன், ஐபிஎல் தொடரில் சரியாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று கூறவில்லை. அதனால் யாரையும் ஐபிஎல் தொடரை வைத்து முடிவு செய்யாதீர்கள். வீரர்களின் முந்தைய செயல்பாடுகளை கருத்தில் கொள்ளுங்கள்” என தேர்வு குழுவினரை சரமாரியாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க:முதல் உலகக்கோப்பை பயணம் குறித்து மனம் திறந்த ஷமி!