இது தொடர்பாக அவர் பேசுகையில்,
"கவுதம் கம்பீர் தனது பந்து வீச்சை எதிர்கொள்ள மிகவும் அஞ்சியுள்ளார். என்னை பொறுத்தவரையில், அவரது கிரிக்கெட் பயணத்தை முடிவடைய செய்ததே நான்தான் என நினைக்கிறேன். குறிப்பாக, 2012இல் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவரை நான்குமுறை நான் அவுட் செய்துள்ளேன் என நினைக்கிறேன்.
போட்டியின் போதும் அல்லது வலைப் பயிற்சியின்போதும் சரி, கவுதம் கம்பீர் என்னை எதிர்கொள்ள விரும்பியதில்லை. அவர் என்னுடன் கண் தொடர்பு வைத்து கொள்வதைத் தவிர்த்துள்ளார் என உணர்ந்துள்ளேன். அவர் மட்டுமில்லாமல், அந்தத் தொடரின்போது அவரை போல மற்ற இந்திய வீரர்களும் எனது பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் தடுமாறினார்கள். ஒரு சிலர் எனது உயரத்தின் காரணமாக, எனது பந்துவீச்சு வேகத்தை கணிக்க முடியாமல் தவித்துள்ளனர்.
தற்போதைய இந்திய அணியின் கேப்டன் கோலிகூட, நான் 130 முதல் 135 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுவேன் என நினைத்தாக என்னிடம் கூறியுள்ளார். ஆனால், நான் 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்துகளை வீசியதால், எனது லைன் அண்ட் லெங்த்துக்கு ஏற்றவாறு பேட்டிங் செய்ய அவரும் சிரமப்பட்டார் என தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணிக்காக நான்கு டெஸ்ட், 60 ஒருநாள், 20 டி20 போட்டிகளில் விளையாடிய முகமது இர்பான் இதுவரை, 108 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் இறுதியாக, 2016 இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில்தான் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி 2012இல் மூன்று ஒருநாள், இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில்தான் இறுதியாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில், டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அஹமதாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் விளையாடியதுதான் கம்பீர் விளையாடிய கடைசி டி20 போட்டியாகும்.
அதேசமயம், கவுதம் கம்பீர் அந்தத் தொடரில் இரண்டுமுறை மட்டுமே முகமது இர்பானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 34 ரன்களும் டி20 தொடரில் 55 ரன்களும் மட்டுமே கம்பீர் எடுத்தார். இந்தத் தொடர் முடிவடைந்த பிறகு கம்பீர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார். அதன்பிறகு அவர் அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். இந்திய அணிக்காக கம்பீர் 58 டெஸ்ட், 147 ஒருநாள், 37 டி20 போட்டிகளில் விளையாடிய கம்பீர் மொத்தம் 10 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க:‘கோமாளி அஃப்ரிடியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்’ - கம்பிர் பதிலடி