கரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், இந்த மாதம் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று ஒரு வார காலம் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து, கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நாடு திரும்பினார்.
அணி நிர்வாகத்திற்கும் ரெய்னாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலேயே அவர் தாயகம் திரும்பியதாகத் தகவல் வெளியானது. இந்தக் குற்றச்சாட்டை வலுப்படுத்தும் விதமாக சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன், "யார் வேண்டுமானாலும் அணியில் இருந்து விலகலாம், நான் யாரையும் கட்டாயப்படுத்தப்போவதில்லை" என்று தெரிவித்தது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்தச் சூழலில் பஞ்சாப்பில் தனது உறவினர்கள் கொலை செய்யப்பட்டதன் காரணமாகவே ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதாக ரெய்னா தெரிவித்தார். மேலும், சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் தனது தந்தையைப் போன்றவர் என்றும், தன்னைத் திட்ட அவருக்கு முழு உரிமை உள்ளது என்றும் ரெய்னா தெரிவித்திருந்தார்.