இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் ஸ்ரீசாந்த். 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த மூன்று பேருக்கும் பிசிசிஐ சார்பாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்த் ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டார். இதனால் தனது வாழ்நாள் தடையை எதிர்த்து கேரள நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். அதில் கேரள நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் தடையை நீக்கியது.
இதை எதிர்த்து, கூடுதல் அமர்வில் பிசிசிஐ முறையிட்டது. அதில் நீதிபதிகள் ஸ்ரீசாந்தின் தடையை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கில், ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடையை மறுபரீசிலனை செய்யவும், தண்டனையைக் குறைக்கவும் உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிசிசிஐ விசாரணை அலுவலர் டிகே ஜெயின் ஏழு ஆண்டுகள் அவருக்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.