ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் டி20 தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி, அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டி ஆர்சி ஷார்ட் - வில் ஜேக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஜேக்ஸ் 34 ரன்களில் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அதிரடியில் மிரட்டி வந்த ஷார்ட் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி ஆர்சி ஷார்ட் 72 ரன்களை எடுத்தார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதமாக, பிலிப், வெதர்லேண்ட், நெல்சன், ஜானதன், கிப்சன், ரஷித் கான் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.
பின்னர் எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேட் ரென்ஷா - டேனியல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இப்போட்டியில் எட்டாவது விக்கெட்டில் களமிறங்கிய டேனியல் வாரல் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் ஸ்டிரைக்கர்ஸ் அணியால் 163 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேனியல் வாரல் 62 ரன்களை எடுத்திருந்தார். ஹரிகேன்ஸ் அணி தரப்பில் ஃபால்க்னர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது.
இதையும் படிங்க:மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று அறிவிப்பை வெளியிட்டது ஐசிசி!