இந்திய கிரிக்கெட் அணியில் பாண்டியா சகோதரர்களான குருணல் பாண்டியா - ஹர்திக் பாண்டியா இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தால் அசத்தி வருகின்றனர். உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசிய குருணல் பாண்டியா தொடர்நாயகன் விருதை வென்றார்.
இதையடுத்து, இவ்விரு வீரர்களும் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளனர். இதற்காக, இருவரும் வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், குருணல் பாண்டியாவின் பந்துவீச்சை எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா, அவரது தலைமேல் பந்தை பறக்கவிட்டார். இதனால், ஜஸ்ட் மிஸ்ஸில் குருணல் பாண்டியாவின் தலை தப்பியது.
இதைத்தொடர்ந்து, பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பாண்டியா எதிர்கொண்ட பெரும்பாலான பந்துகளையும் சிக்சர்களாக விளாசினார். இந்த வீடியோவை ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அத்துடன், பாண்டியா Vs பாண்டியா பலப்பரீட்சையில் தான் வெற்றிபெற்றுவிட்டதாகவும், பயிற்சியில் தங்களது தலையை தாக்க முயன்றதற்கு மன்னித்துவிடுங்கள் எனவும் ஹர்திக் பாண்டியா அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு, குருணல் பாண்டியா இந்த வீடியோவில் தனது பந்துவீச்சை மிஸ் செய்ததை ஏன் பதிவு செய்யவில்லை என பதிலளித்தார். இதைத்தொடர்ந்து சமூகவலைதளங்களில் பாண்டியா Vs பாண்டியா பலப்பரீட்சையில் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் வெளுத்துக்கட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 வரும் 15ஆம் தேதி இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தொடங்கவுள்ளது.