தமிழ்நாடு

tamil nadu

பகலிரவு டெஸ்ட்: எந்த பந்தை உபயோகிப்பது என்ற ஆலோசனையில் பிசிசிஐ!

By

Published : Feb 23, 2021, 6:34 PM IST

Updated : Feb 23, 2021, 7:49 PM IST

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது உபயோகிக்கப்பட்ட எஸ்.ஜி. பந்தின் தரத்தில் பிரச்னை உள்ளதாக இந்திய அணி வீரர்கள் கேப்டன் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பகலிரவு டெஸ்ட் போட்டியில் உபயோகிக்கப்படும் பந்து குறித்த ஆலோசனையில் பிசிசிஐ இறங்கியுள்ளது.

Focus on the cricket ball ahead of day-night Test, vs England
Focus on the cricket ball ahead of day-night Test, vs England

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 05ஆம் தேதி முதல் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது.

இப்போட்டியின்போது உபயோகிக்கப்பட்ட எஸ்.ஜி. பந்தின் தரத்தில் பிரச்னை உள்ளதாக இந்திய அணி வீரர்கள் புகார்களை அடுக்கினர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், இப்புகாரை செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பேசிய விராட் கோலி, “இப்போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்துகளில் தரம், சிறப்பானதாக இல்லை. ஏனென்றால் இதே பிரச்னைகளை நாங்கள் கடந்த காலங்களிலும் சந்தித்துள்ளோம். 60 ஓவர்களில் கிரிக்கெட் பந்தின் தரம் முழுவதும் சேதமடைவது எந்தவொரு டெஸ்ட் அணிக்கும் மகிழ்ச்சியைத் தராது” என்று தெரிவித்தார்.

இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில், “இது எங்களுக்கு மிகவும் விநோதமாக இருந்தது. ஏனெனில் இதுவரை எஸ்.ஜி பந்துகள் இதுபோன்று சேதமடைவதை நான் கண்டதில்லை. முதல் இரண்டு நாள்கள் ஆடுகளத்தின் தன்மை கடினமாக இருந்ததினால், பந்து சேதமடைந்தது என நினைத்தேன். ஆனால் நான்காம் நாள் ஆட்டத்தின் 35 - 40 ஓவர்களை வீசிய போதே பந்து சேதமடைந்தது, அதன் தரத்தின் மீதான சந்தேகத்தை உறுதி செய்தது” என்று கூறினார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகள்

இந்திய வீரர்களின் குற்றச்சாட்டுகளைப் பரிசீலனை செய்த பிசிசிஐ, பந்து தயாரிப்பாளர்களான சான்ஸ்பரேல்ஸ் கிரீன்லாண்ட்ஸ்யிடம் (எஸ்.ஜி) பந்தின் தரம் குறித்து ஆராய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதனையடுத்து பந்தில் சில மாற்றங்களைச் செய்ய எஸ்.ஜி.நிறுவனம் முன் வந்தது.

இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் இதில் பிங்க் நிற பந்து உபயோகிக்கப்படவுள்ளது.

முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் எஸ்.ஜி நிறுவனத்தின் பந்துகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அப்போது ஒரு சிலர் ஆஸ்திரேலியாவின் கூக்கபுரா அல்லது இங்கிலாந்தின் டியூக்ஸ் ரக பந்துகளை பயன்படுத்துமாறு பிசிசிஐக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

ஏனெனில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் தொடங்கியது முதல் டியூக்ஸ் மற்றும் கூக்கபுரா பந்துகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் அந்த ஆலோசனைகளை பரிசீலிக்காத பிசிசிஐ, எஸ்.ஜி பந்துகளிலேயே பகலிரவு டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

ஆனால் தற்போது இந்தியாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு பந்துகளில் மாற்றங்கள் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வீரர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால் நாளை நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது விளையாடக்கூடிய பந்துகளைத் தேர்வு செய்வது குறித்த சிக்கலுக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது.

ஏனெனில் ஆசிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகியவை கூக்கபுரா பந்துகளை டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. மேலும் கூக்கபுரா பந்துகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலமாக விளையாடப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகளின் விவரம்

காரணம் கூக்கபுரா ரக பந்துகளில் தையல்கள் முதல் வரிசை மட்டும் கையாலும், அடுத்தடுத்த வரிசைகளை இயந்திரத்திலும் தைக்கப்படுகின்றன. இதனால் அனைத்து வகையான மைதானங்களிலும் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்ய ஏதுவாக அமைகிறது.

ஆனால் எஸ்.ஜி பந்துகளில் தையல்கள் அனைத்தும் கைகளால் தைக்கப்படுவதால், பந்தின் வடிவத்தில் சிறிதளவு மாற்றங்கள் உண்டாகிறது. இதனால் டெஸ்ட் போட்டிகளில் ஒரு கட்டத்திற்கு மேல் பந்துகளை ஸ்விங் செய்வது சற்று கடினமாக மாறும். இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டிக்கு பிறகு, பந்தின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக எஸ்.ஜி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் இரண்டாவது போட்டியில் பந்தின் தன்மை சற்று அதிகரித்தது போலவே காணப்பட்டது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இந்திய அணி இதுவரை இரண்டு பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. அதிலும் வங்கதேச அணிக்கெதிராக இந்தியாவில் நடைபெற்ற போட்டி 2 நாள்களிலேயே முடிவடைந்தது. இதன் காரணமாக இந்தியாவில் பிங்க் நிற பந்துகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது வீரர்களுக்கு இன்னும் பரிட்சயப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

இதனால் நாளை நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதேசமயம் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மொடீரா மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்: சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கான்வே; நியூசிலாந்து அபார வெற்றி!

Last Updated : Feb 23, 2021, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details