தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ஸ்டார்க்கிடம் ரோஹித் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' - தினேஷ் லாட்

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவுள்ளதை அடுத்து, அவரது சிறு வயது பயிற்சியாளர் தினேஷ் லாட் ஈடிவி பாரத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

EXCLUSIVE: Rohit should be wary of Mitchell Starc, says his coach Dinesh Lad
EXCLUSIVE: Rohit should be wary of Mitchell Starc, says his coach Dinesh Lad

By

Published : Jan 4, 2021, 6:32 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி வீரர் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ரோஹித் சர்மாவின் ஆட்டம் குறித்தும், இந்திய அணி குறித்தும் ரோஹித்தின் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் ஈடிவி பாரத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அவரது பிரத்யேக உரையாடல்...

கேள்வி: மூன்றாவது டெஸ்டில் இந்தியா எவ்வாறு செயல்படும்?

தினேஷ் லாட்: மூன்றாவது டெஸ்டை பற்றி நான் நிச்சயமாக இந்தியா வெற்றிபெறும் என்று நினைக்கிறேன். ஏனெனில் முதல் போட்டியில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர், இந்தியா திரும்பி வந்தவிதம், அதிலும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது மிகப்பெரிய விஷயம். இப்போது ரோஹித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், உமேஷ் யாதவ் காயம் அடைந்தபோதிலும், முகமது சைனி, ஷர்துல் தாக்கூர் என நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அதனால் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு நிச்சயம் அழுத்ததைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.

கேள்வி: இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சோபிக்கத் தவறிவுள்ளனர். இதில் விதிவிலக்காக சுப்மான் கில் மட்டும் சிறப்பாகச் செயல்பட்டார். அதனால் ரோஹித் சர்மா எந்த வரிசையில் களமிறங்குவார் என்று நினைக்கிறீர்கள்?

தினேஷ் லாட்: ரோஹித் சர்மா தொடக்க வீரராக பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அணி நிர்வாகமும் அதனையேதான் செய்ய விரும்பும் என நான் நம்புகிறேன். ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதனால் இப்போட்டியில் மயாங்க் அகர்வாலுக்குப் பதிலாக ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை தொடக்கம் தருவார்கள் என்று நினைக்கிறேன்.

கேள்வி: ரோஹித் சர்மா இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், மிட்செல் ஸ்டார்க்குக்கு எதிராக அவரால் சிறப்பாகச் செயல்பட முடியும் என நினைக்கிறீர்களா?

தினேஷ் லாட்: ஆரம்ப காலங்களில் இடக்கை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ரோஹித் போராடினார். ஆனால் தற்போது அவர் இடக்கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திவருகிறார். இதனால் இப்போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நினைக்கிறேன்.

கேள்வி: ரோஹித் வெளிநாட்டில் விளையாடாததால் இப்போட்டியில் போராடக்கூடும் என்றும், அவரது பெரும்பாலான ரன்கள் இந்தியாவின் பிளாட் பிட்ச்களில் மட்டுமே வந்துள்ளன என்றும் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தினேஷ் லாட்: வெளிநாட்டில் அவரது ஒருநாள் புள்ளிவிவரங்களை நீங்கள் பார்த்தாலும், அவர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் என்பது தெரியும். அவரது யுக்தி என்னவென்றால், பந்தை முன்கூட்டியே கணித்து, விளையாடும் ஆற்றல் பெற்றவர். அதனால் வெளிநாடுகளில் அவர் எந்தச் சிரமத்தையும் சந்திப்பார் என்று நான் நினைக்கவில்லை.

கேள்வி: ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான சராசரியை வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவிலும் அவர் ரன் வேட்டையில் ஈடுபடுவார் என்று நினைக்கிறீர்களா?

தினேஷ் லாட்: ரோஹித் தற்போது சிறப்பான ஆட்டத்திறனுடன் இருப்பதாக நினைக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் அவருடைய அணுகுமுறை ஒரே மாதிரியாக இருக்கும்படி விளையாடிவருகிறார். தற்போதெல்லாம் அவர் ஆரம்பத்தில் சிறிது நேரம் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்திவருவதை நீங்கள் பார்க்க முடியும். அதனால் ஆஸ்திரேலியாவுடனான போட்டியிலும் அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்றே எதிர்பார்க்கிறேன்.

கேள்வி: இப்போட்டியில் எந்தப் பந்துவீச்சாளரிடம் ரோஹித் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

தினேஷ் லாட்: இப்போட்டில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் அவர் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இருப்பினும் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் அவர் அதிக எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்.

கேள்வி: உங்களிடம் பயிற்சிப் பெற்ற ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூர் இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிவருவது குறித்து நீங்கள் பயிற்சியாளராகப் பெருமைப்படுகிறீர்களா?

தினேஷ் லாட்: நிச்சயமாக, ஒரு பயிற்சியாளராக நான் பெருமைப்படுகிறேன். எனது மாணவர்கள் இருவரும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இதுவே அவர்கள் எனக்கு கொடுத்த வெகுமதி என நினைக்கிறேன்.

இதையும் படிங்க:3ஆவது டெஸ்டிலிருந்து விலகிய ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்!

ABOUT THE AUTHOR

...view details