கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக, உலகின் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பெருந்தொற்றினால் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரும் நடைபெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், அந்நாட்டு விளையாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில், 'சர்வதேச கிரிக்கெட்டை மீட்பதற்காக நாங்கள் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தனிமைப்படுத்துதலை மேற்கொள்வோம்' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டோக்ஸ் கூறுகையில், 'கரோனா வைரஸ் தொற்றால் ஏற்கெனவே அனைத்து விளையாட்டு வீரர்களும் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என நினைக்கிறேன். ஆனால், நாங்கள் விளையாடும் இடத்தில் இருந்திருந்தால், இன்னும் அதிகம் மகிழ்ச்சியடைந்திருப்போம்.
இருப்பினும், இன்னும் அதற்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமென்று தெரியவில்லை. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடக்குமா என்பது வீரர்களின் கேள்வியாகவே உள்ளது. ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வீரர்கள் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தனிமைப்படுத்துதலை மேற்கொள்வார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தற்போதுள்ள கிரிக்கெட்டில் விராட் கோலியே மிகவும் நிலையான வீரர் - காகிசோ ரபாடா!