தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 5, 2020, 5:31 PM IST

ETV Bharat / sports

ஸ்டேர்லிங், பால்பிர்னி அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து!

இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

eng-vs-ire-3rd-odi-ireland-chase-329-to-beat-england-in-last-over-thriller
eng-vs-ire-3rd-odi-ireland-chase-329-to-beat-england-in-last-over-thriller

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நீண்ட நாள்களாக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடர் ஜூலை மாதம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முதல் ஒருநாள் தொடராக இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதிய மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது.

இத்தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று (ஆகஸ்ட் 4) நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜேம்ஸ் வின்ஸ் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன், டாம் பான்டன் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய மோர்கன் தனது 14ஆவது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார். அதேசமயம் பான்டன் தனது முதல் ஒருநாள் அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர்.

இறுதியில் டேவிட் வில்லி தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்களை குவித்தது.

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் தொடக்க வீரர் கரேத் டெலானி 12 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். பின்னர் பவுல் ஸ்டேர்லிங்குடன் இணைந்த, அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்டி பால்பிர்னி அதிரடியாக விளையாடி அணியை தோல்வியிலிருந்து மீட்டனர்.

இதில் ஸ்டேர்லிங் தனது ஒன்பதாவது ஒருநாள் சதத்தையும், பால்பிர்னி தனது ஆறாவது ஒருநாள் சதத்தையும் பதிவு செய்து அசத்தினர். இதன் மூலம் அயர்லாந்து அணி 49.5ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி சதமடித்த பவுல் ஸ்டேர்லிங் ஆட்டநாயகனாகவும், இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details