இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில், தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி மான்சஸ்டர் நகரிலுள்ள ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ சிறப்பாக விளையாடி சதமடித்து 112 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னணி பேட்ஸ்மேன்களான ஜோ ரூட், ராய் ஆகியோர் டக் அவுட் ஆன நிலையில், இவர்களின் மோசமான ஃபார்ம் இந்தப் போட்டியிலும் தொடந்தது.
சாம் பில்லிங்க்ஸ் 57 ரன்கள் எடுக்க, வோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் ரன்களை வாரி வழங்கியபோதிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல் ஸ்பின்னர் ஸாம்பா 3 விக்கெட்டுகள் வீழத்தியதுடன், ரன்களையும் சிறிது அளவு கட்டுப்படுத்தினார்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, 75 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்றது.
35 ஓவரில் 225 ரன்கள் எடுக்க வேண்டி இருந்த நிலையில், வீக்கட் கீப்பர் கேரே - ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பான பார்னர்ஷிப் அமைத்தனர். ஒரு புறம் கேரே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் மேக்ஸ்வெல் அதிரடி காட்டினார்.