மெல்போர்னில் நேற்று நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 18ஆவது போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
இதனிடையே, இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின் போது ஃபீல்டிங்கில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான எல்லீஸ் பெர்ரிக்கு வலது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் களத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
காயத்தால் அவதிபட்ட எல்லீஸ் பெர்ரி இதனால், இந்தத் தொடரின் அரையிறுதி போட்டியில் இவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது காயம் காரணமாக அவர் இத்தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய மகளிர் அணியின் மருத்துவர் பிப் இங் கூறுகையில், “அவரது வலது காலில் ஏற்பட்ட தசைபிடிப்பு காயம் மிகவும் மோசமாக உள்ளது. இந்த காயத்திலிருந்து குணமாக அவருக்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். இந்த சிகிச்சையிலிருந்து அவர் குணமாக அணி நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும்” என்றார்.
ஆஸ்திரேலிய அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இவரது இழப்பு அந்த அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மேலும், இந்த காயத்தால் அவர் அடுத்து நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களிலிருந்தும் விலகியுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.
29 வயதான எல்லீஸ் பெர்ரி ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 112 ஒருநாள் போட்டிகளில் 3022 ரன்களும், 152 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேபோல் 120 டி20 போட்டிகளில் 1218 ரன்களும், 114 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க:விராட் கோலிக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்!