கரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு வகையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றன. விளையாட்டுத் துறையிலும் இழப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்களுக்கு ஏற்படவுள்ள இழப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.
ஏனெனில், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு வகையான கிரிக்கெட் தொடர்கள் முற்றிலுமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் ஐசிசியின் உறுப்பு நாடுகள் அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகின்றன. இதனால் கிரிக்கெட் தொடர்களைப் பார்வையாளர்களின்றி நடத்துவதற்கும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் நீஷம், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பார்வையாளர்களின்றி நடைபெறும் போட்டிகளைக் கொண்டு வீரர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.