இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் கவுதம் காம்பீர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்திய அணியின் மிகச்சிறந்த பினிஷராக தோனி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளதை யாராலும் மறுக்க இயலாது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய காம்பீர், "கிரிக்கெட்டை பொறுத்த வரையிலும் ஒருவர் மூன்றாம் இடத்தில் களமிறங்கிவிட்டு, பிறகு ஆறு மற்றும் ஏழாம் இடங்களிலும் அதே திறனை வெளிப்படுத்துவது என்பது இயலாத காரியமாகும். ஆனால் அதனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கச்சிதமாக செயல்படுத்தியுள்ளார்.
அநேகமாக உலக கிரிக்கெட் ஒரு விஷயத்தை தவறவிட்டிருக்கலாம். அதாவது தோனி இந்தியாவுக்கு கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால், உலக கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்ட வீரரைக் கண்டிருக்கும். அநேகமாக அவர் இன்னும் பல ரன்களைப் பெற்றிருக்கலாம், பல சாதனைகளையும் முறியடித்திருப்பார். மேலும் அவர் 3ஆவது இடத்தில் பேட் செய்திருந்தால், அவர் உலகின் மிக அற்புதமான கிரிக்கெட் வீரராகவும் வலம் வாந்திருப்பார்.
தற்போது இந்திய அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கும் கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்திருந்தாலும், தோனி அவரது இடத்தில் களம் இறங்கியிருந்தால் அது முற்றிலும் மாறாக எழுதப்பட்டிருக்கும். தற்போது உலகின் ரன் மெஷினாகவும் தோனி வலம் வந்திருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்காது. இருப்பினும் அவர் தற்போதுவரை உலகின் மிகச்சிறந்த வீரராக வலம் வருவது பாராட்டுக்குரியது" என்று தெரிவித்துள்ளார்.