இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவர் 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலகக்கோப்பையைக் கைப்பற்றித் தந்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆனால் அந்த வீரரின் வாழ்விலும் மாற்றம் வந்தது.
குறிப்பாக 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின்போது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று இந்திய அணி வெளியேறியது. அதன்பின் தோனி தனது கேப்டன் பதவியிலிருந்து தாமாக விலகி அதை இளம் வீரர் கோலியிடம் ஒப்படைத்தார்.
தோனி கேப்டன் பதவியை ஒப்படைத்தாலும் அவரை எப்படியாவது அணியிலிருந்து நீக்க வேண்டும் என பலரும் நினைத்தனர். எனினும் தோனியின் இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் விக்கெட் கீப்பர், ஆகச்சிறந்த பேட்ஸ்மேன் என்ற ஒரு மாற்று வீரர் இன்றளவும் கிடைக்காததே தோனி இந்திய அணியில் இன்றளவும் இடம்பிடித்திருப்பதற்கான காரணமாக அமைந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரின்போதும் தோனி ஒரு சில ஆட்டங்களில் சொதப்பியதால் பல முன்னாள் வீரர்களும் தோனி மீது விமர்சனங்களைத் தொடுத்தனர். ஆனால் அவர்களும் கூட நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ரோஹித், கோலி, ராகுல் என மேல்வரிசை வீரர்கள் வரிசையாக நடையைக் கட்டியபோது பின்னால் தோனி இருக்கிறார் என்ற ஒற்றை நம்பிக்கையில்தான் அந்த மேட்சைப் பார்த்திருப்பார்கள்.
அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அப்போட்டியில் களத்தில் இருந்த தோனி, ஜடோஜா ஆகிய இருவரும் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் எடுத்துச் சென்றனர். அப்போட்டியில் ஜடேஜா போன பின்பும், தோனி முடித்துவிடுவார் என்ற எண்ணம் தோனியை வெறுப்பவர்களுக்கும் கூட இருந்திருக்கும். ஆனால், கப்தில் அடித்த அந்த டைரக்ட்-ஹிட் மட்டுமே, இந்தியா உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதற்குக் காரணம் என்றே கூறலாம்.