இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். சென்னை அணியின் பயிற்சி முகாம் 10ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கேப்டன் தல தோனி முன்னதாக சென்னைக்கு வந்து பயிற்சியைத் தொடங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று சென்னை வந்த தோனி, இன்று சேப்பாக்கம் மைதானத்தில் பேட்டிங் பயிற்சியைத் தொடங்கினார். பயிற்சியைப் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தோனியின் வருகையின்போது ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
ரசிகர்களின் கரகோஷத்துடன் களமிறங்கிய கேப்டன் தோனி, பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். உலகக்கோப்பைத் தொடருக்கு பின் ரசிகர்கள் கண் பார்வையில் சிக்காத தோனி, முதல்முறையாக பேட்டிங் பயிற்சியை தொடங்கியது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் தோனி பயிற்சிக்காக களமிறங்கும் வீடியோ பதிவிட்ட சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியுடன் சென்னை அணியின் முரளி விஜய், ராயுடு, பியூஷ் சாவ்லா, ஆசிஃப் ஆகிய சென்னை வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:தோனிக்கு இன்னும் வயசாகல...! - வாட்சன்