இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் தலைக்காட்டாமல் இருந்த தோனி, ஐபிஎல் தொடரில் களமிறங்க பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
ஆனால், கரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே தோனி ஓய்வு பற்றிய பேச்சுகள் அதிகமாகின. இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19ஆம் தேதி தொடங்கி, நவ.10ஆம் தேதி முடிக்க பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து ஐபிஎல் அணிகள் ஆகஸ்ட் இறுதியில் துபாய் செல்ல திட்டமிட்டிருந்தன.
இந்தநிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சென்னை அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டு, வீரர்கள் அனைவரும் நேற்று(ஆக.14) சென்னை வந்தனர். தனி விமானம் மூலம் வந்த அணியிருடன் தோனி வந்த வீடியோ, சமூக வலைதளத்திலும், கிரிக்கெட் ரசிகர்களிடையும் வைரலானது.
நாட்டின் 74 ஆவது சுதந்திர தினமான இன்று( ஆக.15) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், ''இதுவரையில் அளித்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. 1929 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக எடுத்துக்கொள்ளுங்கள்'' என பதிவிட்டுள்ளார். அத்துடன் இணைத்து, கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை களத்தில் உடன் ஆடிய வீரர்களுடனான புகைப்படங்கள் அடங்கிய ஞாபக வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க:தோனி நினைக்கும் வரை ஆடட்டும்... இது நன்றிக்கான நேரமல்ல!