இந்தியாவில் தென் ஆப்பிரிக்கா ஆடவர் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டதைப் போலவே, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியும் ஏழு டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி சூரத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 43 ரன்கள் அடித்தார்.
#INDvSA: மூன்று ஓவர்கள்... மூன்று மெய்டன்... மூன்று விக்கெட்; கெத்து காட்டிய இந்திய வீராங்கனை!
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா மூன்று ஓவர்களில் ஒரு ரன்னும் வழங்காமல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, 131 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்துவரும் தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு வீராங்கனை தீப்தி ஷர்மாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ் மூன்று ரன்களுக்கு தீப்தி ஷர்மா பந்துவீச்சில் போல்டானார்.
அவரைத் தொடர்ந்து வந்த டி கிளேர்க்கும், அவரது பந்துவீச்சில் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர், 14ஆவது ஓவரில் மீண்டும் பந்துவீச வந்த தீப்தி ஷர்மா ஓவரில், ஷப்நிம் இஸ்மாயில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், தீப்தி ஷர்மா மூன்று ஓவர்களில் ஒரு ரன்கூட வழங்காமல் மூன்று மெய்டன்களை வீசியதோடு மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி மிரட்டியுள்ளார். இவரது பந்துவீச்சுத் திறனைக் கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.