ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் மும்பையில் உள்ள தனியார் விடுதியில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இறப்புக்குப் பல்வேறு பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.
மேலும் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியின்போது வீரர்கள் தங்களது கைகளில் கறுப்புப் பட்டை அணிந்து டீன் ஜோன்ஸிற்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் அவருக்கு இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மரியாதை செலுத்தப்பட்டது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுவதை விருப்பமாகக் கொண்டிருந்த் டீன் ஜோன்ஸுக்கு, அந்த மைதானத்தில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அவரது பேட், அவரது தொப்பி, கண்ணாடி ஆகியவற்றை ஆடுகளத்தில் வைத்து அவரது மனைவியும், மகள்களும் மரியாதை செலுத்தினர். அப்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரும் உடன் இருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 52 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டீன் ஜோன்ஸ் 9,699 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் இந்திய அணிக்கெதிராக 1986ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டீன் ஜோன்ஸ் ஆடிய ஆட்டம் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: வில்லியம்சன், டெய்லர் அதிரடியால் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து!