கரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆஸ்திரேலியாவில் வரும் ஆக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்டிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது தொடர்பாக வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நேற்று ஐசிசி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என்பது குறித்து ஜூன் 10ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என ஐசிசி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டி20 உலக்கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு 80 மில்லியன் (இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய்) வரை இழப்பு ஏற்படக்கூடும் என அதன் தலைமை நிர்வாக அலுவலர் கெவின் ராபட்ர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஒருவேளை டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி பார்வையாளர்களின்றி நடைபெற்றால் டிக்கெட் வருவாய் மூலம் ஆஸ்திரேலியா வாரியத்திற்கு 50 மில்லியன் (ஆஸ்திரேலிய டாலர்) இழப்பு நேரிடும்.
மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 10 மில்லியன் வரை செலவாகும். அதனால் டி20 உலகக்கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு பெருமளவில் பொருளதாரா இழப்பு ஏற்படும்" என்றார்.
முன்னதாக, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உமிழ்நீரின்றியும் பந்தை ஸ்விங்காக்க முடியும்’ - டியூக்ஸ் உரிமையாளர்