இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் மூலம் மேற்கு வங்கம் சிலிகுரி நகரத்தைச் சேர்ந்த 16 வயது கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் இந்திய அணியில் அறிமுகமானார்.
இதையடுத்து, மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியிலும் அவர் விளையாடி ரன்கள் அடித்தார். இந்த நிலையில், இந்தியாவில் பரவிவரும் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு எதிராக போராட பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்துவருகின்றனர்.
அந்தவகையில், கோவிட் -19 வைரஸை எதிர்த்து போராட ரிச்சா கோஷ் ஒரு லட்சம் ரூபாயை மேற்கு வங்க நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். அதற்கான காசோலையை அவரது தந்தை சிலிகுரி மாவட்ட நீதிபதியிடம் வழங்கினார் என்பதை மேற்கு வங்க மாநிலத்தின் கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், கோவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைவரும் போராடிவரும் இந்த தருணத்தில் நான் ஒரு பொறுப்பான குடிமகனாக ஒரு லட்சம் ரூபாயை நிதியாக வழங்கிள்ளேன் என்றார்.
இந்தியாவில் கோவிட் -19 வைரசால் இதுவரை 979 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அடுத்த மாதம் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா: ரூ. 1,500 கோடி நிதியுதவி அறிவித்த டாடா!