கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வங்கதேசத்தில் இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 110 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக வங்கதேச அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வங்கதேசத்தில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக, வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் தான் பயன்படுத்திய பேட்டை ஏலத்தில் விற்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷாகிப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பேட், ஆனால் தற்போது இதைவிட என் மக்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள். எனவே எனது எஸ்.ஜி. பேட்டை நான் ஏலத்தில் விற்க முடிவு செய்துள்ளேன். இந்த பேட்டின் மூலம் நான் 1500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளேன். மேலும் ஐசிசி உலகக்கோப்பையில் இதன் மூலமாகவே சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தினேன். முடிந்தவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்க முயற்சி செய்யுங்கள், உங்களால் முடிந்தவரை பலருக்கு உதவுங்கள். நாம் ஒரு அணியாக மட்டுமே இப்பெருந்தொற்றை வெல்ல முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.