இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்தத் தொடர் முடிந்த கையொடு, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ்பதவியிலிருந்து விலகினார். அவரது பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி முதல்முறையாக சமீபத்தில்தான் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன், இங்கிலாந்தின் முன்னாள் வீரர்களான அலெக் ஸ்டீவர்ட், கிறிஸ் சில்வர்வுட் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். கேரி கிறிஸ்டன் தலைமையின் கீழ்தான் இந்திய அணி 2011 உலகக்கோப்பை தொடரை வென்றது. இதனால், அவரைதான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நடைபெற்ற நேர்காணில் கிறிஸ் சில்வர்வுட் சிறப்பாக செயல்பட்டதால், அவரையே இங்கிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ட்ரெவர் பேலிஸ் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பதவி வகித்தபோது, கிறிஸ் சில்வர்வுட் அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.