நடப்பு சீசனுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கர்நாடக - சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்துவரும் சவுராஷ்டிரா அணியில் இந்திய வீரர் புஜாரா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். முதல் தர போட்டிகளில் அவர் அடிக்கும் 50ஆவது சதம் இதுவாகும்.
இதன்மூலம், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த ஒன்பதாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இப்பட்டியலில் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 81 சதங்களுடன் முறையே முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.
இதுமட்டுமின்றி, தற்போது முதல் தர போட்டிகளில் விளையாடிவரும் வீரர்களில் 50 சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் அலாஸ்டர் குக் (65 சதங்கள்), இந்தியாவின் வாசிம் ஜாஃபர் (57 சதங்கள்), தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா (52 சதங்கள்) ஆகியோருக்கு அடுத்தப்படியாக புஜாரா (50 சதங்கள்) நான்காவது இடத்தில் உள்ளார்.
முதல் தர போட்டிகளில் 50 சதங்கள் அடித்த இந்திய வீரர்கள்:
- சுனில் கவாஸ்கர் - 81 சதங்கள்
- சச்சின் டெண்டுல்கர் - 81 சதங்கள்
- ராகுல் டிராவிட் - 68 சதங்கள்
- விஜய் ஹசாரே - 60 சதங்கள்
- வாசிம் ஜாஃபர் - 57 சதங்கள்
- திலிப் வெங்சர்கார் - 55 சதங்கள்
- லக்ஷ்மன் - 55 சதங்கள்
- முகமது அசாருதீன் - 54 சதங்கள்
- புஜாரா - 50 சதங்கள்
இதையும் படிங்க:நான்கு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போன ஷேன் வார்னேவின் தொப்பி