தற்காலத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் திகழும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறார். இந்நிலையில், ஹைதராபாத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதில், 208 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கோலியின் சிறப்பான பேட்டிங்கால் 18.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இப்போட்டியில் 50 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்டரி, ஆறு சிக்சர் என 94 ரன்களுடன் இறுதிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த கோலிக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.
சர்வதேச டி20 போட்டிகளில் அவர் பெறும் 12ஆவது ஆட்டநாயகன் விருது இதுவாகும். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் அவர், ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். முகமது நபி இதுவரை விளையாடிய 75 போட்டிகளில் 12 முறை ஆட்டநாயகன் விருது பெற்றிருந்த நிலையில், கோலி 73 போட்டிகளிலேயே இச்சாதனையை எட்டியுள்ளார்.