கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலக நாடுகள் முழுவதும் தற்போது கடுமையான சூழலில் சிக்கித் தவித்துவருகின்றன. இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் தங்கள் மக்களை சுய தனிமைப்படுத்துதலை மேற்கொள்ளுமாறும், ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளன.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ, கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடிவரும் மக்களை உற்சாகப்படுத்தும்வகையில் 'நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்' (We Not Giving Up) என்ற மூன்றரை நிமிட பாடலை வெளியிட்டுள்ளார்.
அப்பாடலில் பிராவோ, பொதுமக்களிடம் கைகளைத் தொடர்ந்து கழுவுதல், வீட்டிலேயே தங்கி இருத்தல், நோய் தொற்று உள்ளவர்களிடமிருந்து விலகி இருத்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் போன்ற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இப்பாடலை ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் பிராவோவின் இந்தப் பாடல் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, சமூக வலைதளவாசிகளிடமும் வைரலாகப் பரவத்தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க:முன்பு உலகக்கோப்பை நாயகன்; தற்போது உலக நாயகன் - ஜோகிந்தருக்கு ஐசிசி புகழாரம்!