ஜமைக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பார்வைத் திறனற்ற இந்திய அணி, மூன்று ஒருநாள், இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஜமைக்காவை வீழ்த்தியது. இதனிடையே, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
20 ஓவர்களில் 286 ரன்கள்... இந்திய வீரர்களின் அசாத்திய ரன்குவிப்பு - பார்வைத்திறனற்ற கிரிக்கெட்
ஜமைக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பார்வைத் திறனற்ற இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சுனில் ரமேஷ், வெங்கடேஸ்வரா ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால், 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சுனில் ரமேஷ் 107 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வெங்கடேஸ்வரா 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து, 287 ரன்கள் இலக்குடன் ஆடிய ஜமைக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 48 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி இப்போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. அதன்பின்னர், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.